குழந்தைகளிடத்தில் அறிவியலைத் திணிப்பதை நான் வரவேற்கவில்லை. தேவையான நேரத்தில் அதைத் தெரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களிடம் உண்டு.
"குழந்தைகளே... ஆகாய விமானம் என்று சொல்லக்கூடாது. அதைப் பறவைக்கப்பல் என்று சொல்லுங்கள்" எனப் புலவர் தணிகை உலகநாதன் ஒரு மாணவர் கூட்டத்தில் பேசினார். “கப்பல் எப்படி ஆகாயத்தில் பறக்கும்?” என்று ஒரு மாணவன் எழுந்து கேட்டான்.
"சரி. சரி. உங்களுக்கு இந்த வயதில் அது தெரியாது" என்றார் தணிகை உலகநாதன். உண்மைதான். தேவையான நேரத்தில் அது நல்ல தமிழ்ச்சொல் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்வார்கள்.
மகாகவி பாரதியார் ‘கற்பனையூர்' என்ற மொழி பெயர்ப்புக் கவிதையில்,
‘குழந்தைகள் ஆட்டத்தின் கனவையெல்லாம் – அந்தக் கோல நன்னாட்டிடைக் காண்பீரே.’
என்று பாடியுள்ளார். அவர்களது அரசாங்கம் கற்பனையும் மகிழ்ச்சியும் நிறைந்தது.
இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்ட கவிஞர் உமையவன், அருமையான கற்பனை மூலம் இந்த நூல் முழுதும் கொடிகட்டிப் பறந்திருக்கிறார். அனைத்துக் கதைகளையும் குழந்தைகள் விரும்புவார்கள். நல்ல படங்களுடன் இந்நூல் வெளிவரவேண்டும், என்பது என் விரும்பம்.
சுட்டி எலி (சுண்டெலி) பற்றி ஒரு கதை. தேர்ந்த சிறுகதையாசிரியரைப் போல அருமையான திருப்பத்துடன் கதையை முடித்திருக்கிறார்.
தின்பண்டங்கள் உள்ள ஜாடி திறந்திருக்கிறது. சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்த எலிகள் ஜாடிக்குள் சென்று ஒரு கை பார்க்கின்றன. ஜாடி மூடப்படும்போது சுட்டி எலி தவிர மற்றவை தப்பி விடுகின்றன.
(அடடா... நம் எலி உலகில் நண்பர்களைக் காண முடியாமல் அகப்பட்டுக் கொண்டோமே) என சுட்டி எலி வருந்துகிறது.
இங்கே ஒரு திருப்பம்.
வீட்டுக்காரர் வீடு மாற்றுகிறார். சாமான்களுடன் ஜாடியும் செல்கிறது. சுட்டி எலியின் மனம் என்ன பாடுபடும் என்று நினைத்துப் பாருங்கள்.
இங்கே மறுபடியும் ஒரு திருப்பம்.
வண்டி நிற்கிறது.
'தப்பித்தோம்' என்று சுட்டெலி மகிழ்கிறது. பழைய வீட்டுக்காரர் ஜாடியைத் திறந்தார்
சுட்டெலி வெளியே குதித்து, தன் கூட்டத்தாருடன் சேர்ந்து கொண்டது.
இந்த ஒரு கதை பெரிய பெரிய படங்களுடன் பலமொழிகளில் வெளிவந்தால் உமையவன் சர்வதேச எழுத்தாளர் ஆகிவிடுவார்.
என்னுடைய கவிதைகளைப் போலவே, அணிந்துரையும் சுருக்கமானது.
குழந்தைகளே! படித்து மகிழுங்கள். பெரியவர்களே..... கொஞ்சநேரம் குழந்தைகளாக மாறுங்கள்.
அன்புடன்
கவிமாமணி இளையவன்
இளம் எழுத்தாளர் ப.ராமசாமி என்கிற உமையவன் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். கதை, கவிதை, கட்டுரை சிறுவர் இலக்கியம், ஹைக்கூ, ஆன்மிகம், உரைநூல்கள், பதிப்பு நூல்கள் என பதினைந்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். எழுதுவதோடு மட்டுமின்றி கவியரங்க நடுவர், பட்டிமன்ற பேச்சாளர், கருத்தரங்கம் என இலக்கிய நிகழ்வுகளிலும் தன் முத்திரையைப் படைத்து வரும் பன்முகப் படைப்பாளி.
தமிழக அரசின் 'தமிழ் செம்மல்' விருது, கம்போடியா அரசின் உலக பாரதியார் விருது உட்பட இரண்டு அரசு விருதுகளை பெற்றுள்ளார். ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியா நிறுவனம் வழங்கிய "பெருமைமிகு தமிழர் விருது" (Pride of Tamilnadu - 2018) உள்ளிட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட விருதுகளையும், பல சிறந்த நூல்களுக்கான பரிசினையும் பெற்றுள்ளார்.
சாகித்ய அகாடெமியின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் சார்பாக பங்குகொண்ட ஒரே இளம் எழுத்தாளர். கலைஞர், மக்கள், பொதிகை. Z தமிழ் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் இவரது நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது. அகில இந்தியா வானொலி, இணைய காணொலி போன்றவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இவரின் சிறுவர் நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கவிதைகள் கல்லூரி பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.