சிறுவர் இலக்கியத்திற்கு அண்மைக் காலங்களில் பங்களிப்பவர்கள் மிகவும் குறைவு. அதிலும் குறிப்பாக, அறிவியல் தொடர்பான செய்திகளை சுவைபடச் சொல்வது இன்னும் அரிது. அந்த முயற்சியில் நூலாசிரியர் ஈடுபட்டு எளிதில் வாசிக்கத் தகுந்த சிறுநூலை கதை வடிவத்தில் உருவாக்கித் தந்திருக்கிறார். உரையாடல் நடையில் அமைந்திருக்கும் இந்த நூல் வாசிப்பில் மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.
பிரபஞ்சம் உருவானதைப் பற்றி மாணவர்களிடம் ஆசிரியர் விளக்குவதைப்போல ஆரம்பித்த முதல் கதை மாணவர்களுடைய சிந்தனையைத் தூண்டுவதாகஇருக்கிறது. 'ஆகாய வீடு' என்கிற இரண்டாது கதையில் விண்வெளி நிலையத்தைப் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். பெரியவர்களுக்குக் கூட அதில் புதிய செய்திகள் புதைந்து கிடக்கின்றன.
நாணயங்களை வைத்து தண்ணீர் படாமல் காசு எடுக்கும் கலையிலிருக்கும் அறிவியலைச் சுட்டிக் காட்டுகிறார். மழை எப்படி உருவாகிறது என்பதை நேர்த்தியாகச் சொல்லித் தருகிறார். சூரிய கிரகணத்தைப் பற்றியும் சுவையாகத் தெளிவுப்படுத்துகிறார். ஓசோன் படலத்தின் ஓட்டையைப் பற்றி அக்கறையுடன் பேசுகிறார். மின்னணுக் கழிவுகளைப் பற்றி நம்மை எச்சரிக்கிறார். கழிவுகளை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறார். பூச்சிகளைப் பற்றி ஆர்வத்தைத் தட்டான் என்கிற பூச்சியைக் கொண்டு விளக்குகிறார்.
இப்படி ஒரே மூச்சில் படித்து விடக் கூடிய எளிய கதைகளை இந்தத் தொகுப்பில் அவர் அளித்திருக்கிறார். பெற்றோர் இதைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்தால் சரளமாகப் படிக்கவும், அறிவியலை அறியவும் இது உதவும். உமையவன் பாராட்டுக்குரியவர்.
வெ. இறையன்பு
இளம் எழுத்தாளர் ப.ராமசாமி என்கிற உமையவன் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். கதை, கவிதை, கட்டுரை சிறுவர் இலக்கியம், ஹைக்கூ, ஆன்மிகம், உரைநூல்கள், பதிப்பு நூல்கள் என பதினைந்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். எழுதுவதோடு மட்டுமின்றி கவியரங்க நடுவர், பட்டிமன்ற பேச்சாளர், கருத்தரங்கம் என இலக்கிய நிகழ்வுகளிலும் தன் முத்திரையைப் படைத்து வரும் பன்முகப் படைப்பாளி.
தமிழக அரசின் 'தமிழ் செம்மல்' விருது, கம்போடியா அரசின் உலக பாரதியார் விருது உட்பட இரண்டு அரசு விருதுகளை பெற்றுள்ளார். ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியா நிறுவனம் வழங்கிய "பெருமைமிகு தமிழர் விருது" (Pride of Tamilnadu - 2018) உள்ளிட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட விருதுகளையும், பல சிறந்த நூல்களுக்கான பரிசினையும் பெற்றுள்ளார்.
சாகித்ய அகாடெமியின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் சார்பாக பங்குகொண்ட ஒரே இளம் எழுத்தாளர். கலைஞர், மக்கள், பொதிகை. Z தமிழ் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் இவரது நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது. அகில இந்தியா வானொலி, இணைய காணொலி போன்றவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இவரின் சிறுவர் நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கவிதைகள் கல்லூரி பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.