பாரதமும் இராமாயணமும் இதிகாசங்கள் எனப்படு கின்றன. வீர வரலாற்றைக் காவியமாகக் கூறினால் அஃது இதிகாசம் எனப்படுகிறது.
இஃது இதிகாசம் ஆகாது; தெய்வக்கதை; தெய்வம் மானிடனாக அவதரித்து மனிதனைப் போல இயங்கி, தெய்வசக்தியோடு செயல்ஆற்றி வாழ்ந்த கதை இது.
கண்ணனின் கதை. அவன் ஒரு மாவீரன் என்பதற் காகப் பேசப்படுவது இல்லை; பிள்ளைமை அழகுடையது. அனைவரையும் மகிழ்வித்தவன். வீரன்' என்றால், அஃது அருச்சுனனைத்தான் குறிக்கும்; அவன் செயல் சிறந்தது; அதற்கு வழிகாட்டி கண்ணன்; "வில் அம்பினைவிட அறிவு, கூர்மை வாய்ந்தது" என்பது இவனிடம் காணப்படுகிறது. வலிமை மட்டும் வெற்றியைத் தந்துவிடாது; அறிவுக் கூர்மை, "இதுவே வெற்றி தரும்" என்பதனைக் கண்ணன் கதை காட்டுகிறது.
பிறந்த உடனே இடம் மாறிவிடுகிறான்; கம்சன் ஏமாற்றப்படுகிறான்; அவன் அறிவுத் திறன் அவன் குறும்புகளில் வெளிப்படுகிறது; "தீராத விளையாட்டுப் பிள்ளை; பெண்களுக்கு ஓயாத தொல்லை" என்ற பெயர் வாங்குகிறான்; யோகிகளைப் போலச் சிரிக்காமல் அவன் வாழவில்லை; "பெரியவர் என்றால் சிரிக்கக் கூடாது," என்ற போலித்தனம் அவனிடம் இல்லை; அவன் ஒவ்வொரு செய்கையிலும் ஒரு புதுமை, ஒரு சிரிப்பு, ஒர் அற்புதம், திடுக்க வைக்கும் சாதனைகள் இவை எல்லாம் அவனை நேசிக்கச் செய்கின்றன.
முடியில் மயிற்பீலி, மஞ்சள் நிற ஆடை, துளப மாலை, கையில் குழல்; அதில் எழுப்பும் ஓசை எங்கும் இன்பத்தை மூட்டுகிறது. அவன் குழல் இசை கேட்டு மயங்காதார் இல்லை; அந்த வகையில் அவன் ஒர் இசைக் கலைஞனாய் மற்றவர்களை மகிழ்விக்கிறான்; மகளிரோடு சேர்ந்து, குரவைக் கூத்து ஆடி, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான்.
அவன் சகடம் உதைத்ததும், பூதனையின் பால் உண்டதும், அவள் உயிரைச் சேரப் பருகியதும், மருத மரங்களை வீழ்த்தியதும், அசுரர்கள் பலரை இனம் தெரிந்து அழித்ததும், கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்ததும், இந்திரனுக்கு இட்ட சோறும் கறியும் தான் ஆயர்சிறுவர்களோடு உண்டதும், மலைப்பாம்பினைப் பிளந்ததும், நாரை வாயைக் கிழித்ததும், தேனுகளை விளவில் எறிந்து அழித்ததும் எல்லாம் திவ்விய பிரபந்தத்தில் திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றன.
கண்ணன் பலதார மணம் புரிந்து, சாதனை படைத்த வனாய் விளங்குகிறான்; பதினாறாயிரம் கன்னியர் அவனைக் கணவனாய் வரிக்கின்றனர். ருக்குமணியை மணக்கிறான்; தொடர்ந்து சத்தியபாமை, சாம்பவதி இவ்வாறு எட்டு பேரை மணக்கிறான்; வாழ்க்கையின் சுகத்தை உதறித் தள்ளியவன் அல்லன், களங்கம் அறியாத யாதவக் கன்னியரை மகிழ்வித்தவன். -
இராதை கண்ணனுடன் நெருங்கி ஆடிப் பாடி மகிழ்ந்தவள்; காதற் பறவைகளாய்ப் பழகியவர்கள்; அவன் அவளை மணக்கவே இல்லை; "உறவினை மறக்கவும் தெரியும்" என்று நடந்துகொண்டவன் அவன்.
நப்பின்னை என்னும் நங்கையைப்பற்றித் தமிழ் நூலாகிய பிரபந்தம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. அவள் அவனுக்கு இளமைத் தோழி; வாழ்க்கைத் துணைவி.
"எருதுகள் ஏழனை அடக்கி, அவளை மணந்தான்" என்று கூறப்படுகிறது. பாகவதம் நப்பின்னையின் பெயரையே குறிப்பிடவில்லை; சியாமந்தக மணி என்னும் ஒரு கதைக் கருவினைக் கொண்டு கதை அமைத்திருப்பது வியப்பாயுள்ளது.
கதை என்றால் கண்ணனின் கதைதான் எல்லா நயங்களும் பெற்றுள்ளது. கண்ணனின் விசயம், விளையாட்டு, லீலை என்னும் பெயர்கள் தாராமல் 'கண்ணனின் திருக்கதை' என்னும் தலைப்போடு வெளி வருகிறது. கதையம்சம் நிறைந்த ஒர் அதீத தெய்வ மனிதனின் கதை இது; அனைவரும் அறிந்த கதைதான்; என்றாலும் தெளிவாய் அறிய இந் நூல் துணை செய்கிறது.
கண்ணனது அவதாரப் பெருமையைப் பெரியாழ்
வார் திருமொழியில் ஒரு பாடல் நன்கு தெளிவுறுத்தும்.
கண்ணன் வாயினுள் மண்ணைப் போட்டுக் கொள் கிறான்; யசோதை வாய் திறக்கச் சொல்கிறாள்; வாயில் மண்ணை மட்டும் அன்று; இந்த வையகம் முழுவதையும் காண்கிறாள்; மற்றைய மாதராரும் வந்து காண்கின்றனர்; அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
"இவன் ஆயன் அல்லன்; அருந்தெய்வம், மாயப் பண்பு உடையவன்; நன்மை செய்பவன்' என்று கூறுகின்றனர்.
"உலகம் இறைவனுள் அடக்கம்" என்னும் செய்தியை வாயினுள் வையகம் கண்ட காட்சியில் உணர்த்துகிறார். அவன் அமானுஷ்யன்: “மனிதனுக்கு அப்பாற்பட்ட தெய்வம்" என்பதை "மகன் அல்லன்; அருந் தெய்வம்" என்னும் தொடரால் உணர்த்துகிறார். "அதீத செயல்களை ஆற்றுபவன் (Super man)" என்னும் கருத்தை "மாயச் சீர் உடைப் பண்பினன்' என்று கூறி உணர்த்துகிறார்.
"உலகத்திற்கு நன்மை செய்ய அவதரித்தவன்” என்பதைப் 'பாயன்' என்னும் தொடரால் குறிப்பிடுகின்றார்.
இதோ அந்தப் பாடல் வாயுள் வையகம் கண்ட மடநல்லார், "ஆயர் புத்திரன் அல்லன்; அருந்தெய்வம், மாயச் சீருடைப் பண்புடைப் பாலகன்; பாயன்" என்று மகிழ்ந்தனர் மாதரே
-பெரியாழ்வார் திருமொழி இதுவே கண்ணனின் அவதாரப் பெருமையாகும். இக் கதையை இந் நூல் சொல்ல எடுத்துக்கொண்ட முயற்சியே கண்ணனின் திருக்கதை.
ரா. சீனிவாசன்