மகாபாரதம் கதை முழுவதையும் காகிதப்புத்தகமாக எடுத்து செல்வது என்பது எளிதானது அல்ல.
மின்புத்தகம் எங்கும் எடுத்து செல்ல எளிமையானது. அதனால் முதல் முதலாக
மகாபாரதம் கதை முழுவதையும் Mukil E Publushing and Solutions Private Limited
மூலம் ஒரே மின் புத்தகமாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
படித்து மகிழுங்கள்.
முன்னுரை
வடமொழியில் எழுதிய இராம காதையையும் மாபாரதத்தையும் தமிழ்ப்படுத்திய கம்பரும் வில்லிபுத்து ராரும் அவற்றை வெறும் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. தமிழ் இன்பம் தோன்றும்படி அவற்றைத் தம் கவிதை யாற்றலால் சுவைபடத் தந்துள்ளனர். அதனால் இப் படைப்புகள் மூல நூலில் உள்ள கதையும், தமிழ்க் கவிதையும் கலந்து மாபெரும் காப்பியங்களாகத் திகழ் கின்றன. இவையே இன்று மேடைகளிலும் அரங்கு களிலும் செவி நுகர் கணிகள் என்று பேசப்படுகின்றன.
வில்லி பாரதமும் பட்டி தொட்டிகளில் பாரதப் பிரசங்கங்களாகப் பேசப்பட்டது. இன்று உரை நூல்கள் வந்துவிடுவதால் இருந்த இடத்தில் இருந்து இந்நூல்களின் அருமை பெருமைகளை உணர வாய்ப்பு ஏற்பட்டு விட்ட தால் பாரதப் பிரசங்கங்கள் குறைந்து விட்டன.
வில்லி பாரதம் இக் கதையினை 'மாபாரதம்' என்ற தமிழ்ப் பெயராலேயே அழைக்கிறது. மற்றும் வட மொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தித் தந்துள்ளது. கர்ணன் என்பதைக் கன்னன் என்று வழங்குகிறது. பீஷ்மன் என்பதை வீடுமன் என்றே வழங்குகிறது. காரணம் வட சொற்களைத் தமிழில் சொல்லும்போது தமிழ் ஒசைபட அமைய வேண்டும் என்பது மொழியியல்பு. எனவே தமிழின்பம் தோன்றச் சந்த ஒசைபட எழுதப்பட்ட இந் நூல் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது.
வில்லியும் வியாச பாரதத்தைக் கற்றவர்தான். அவருக் குக் கிடைத்த ஏட்டுச் சுவடி எதுவோ அதுவே அவருக்கும் மூலநூலாக அமைந்து இருக்க வேண்டும். அதைப் பின்
பற்றிக் கதையைச் சொல்கிறார். மூல நூல் மொழி பெயர்ப்புகள் என வந்துள்ள உரைநடை நூல்களில் வில்லி பாரதத்தில் கூறப்படுவதுபோல் கதை ஒட்டம் சரியாக அமையவில்லை. புதை பொருள் ஆராய்வது போல அதை வெளியிட்டிருக்கிறார்கள். வில்லிபாரதம் தெளிவாக ஆற்றொழுக்காகக் கதையை இயக்குகிறது. அதனையே பின்பற்றி இங்கு எழுதப்பட்டதால் கதை தெளிவாகக் கூறமுடிந்தது.
வில்லிபுத்துரார் கன்னன் முடிவும், துரியன் முடிவும் கூறிக் கதையை முடித்துவிடுகிறார். மூல நூல் மற்றும் எட்டுப்பருவங்களில் அவர்கள் பரலோக யாத்திரை மற்றும் ஒவ்வொருவர் மரணம் பற்றியும் கூறுகிறது. இது புராணிகர்களின் போக்கு; அதைத் தவிர்த்துக் காவிய அமைப்புக்கு ஏற்றவகையில் துரியனின் முடிவோடு வில்லி புத்தூரார் கதையை முடித்திருப்பது தனித்தன்மையாகும்: அதே முறையில் இங்கும் கதை முடிக்கப்படுகிறது.
கதையின் கரு பாஞ்சாலியின் சபதம்; எனினும் அது உணர்த்தும் நீதி போர் என்பது அழிவை உண்டாக்கும்: அது தவிர்க்க வேண்டியது மானுட நெறி என்றும் காட்டுகிறது.
கீதை உபநிடதத்தின் சாரம்; அது இடம் பெற்றிருப் பது பாரதத்துக்குப் பெருமை சேர்க்கிறது.
இராமயணம் லட்சிய மாந்தர்களைப் படைத்துத் தருகிறது; பாத்திரப் படைப்புகள் மகத்தானவை. பாரதம் கதை நிகழ்ச்சிகளால் சிறப்பு உடையது. பாத்திரப்படைப் புக்கு முதலிடம் தரவில்லை; கருத்துரைகள் மிகுதியும் தருகிறது; கதை நிகழ்ச்சிகள் இன்றைய நடைமுறைக்கு
வழிகாட்டுவன ஆகும். (1) சூது தீது; (2) தாயவழக்குகள் அழிவைத்தரும்; (3) பெண்ணடிமை கூடாது; (4) தவறுகள் வாழ்க்கைக்குத் தடை இல்லை என்பது போன்ற கருத்து கள் உள்ளன. கதையின் கருவே பாஞ்சாலி சபதம்தான்; எனினும் அறிவு அற்றம் காக்கும் கருவி என்பதை பாரதம் காட்டுகிறது. தருமம் நம் பக்கம் இருந்தால் மட்டும் வெற்றி காண முடியாது, செயலாற்றும் திறனும், திட்ட மிடும் அறிவும் தேவை என்பதை வலியுறுத்துகிறது. நல்ல வனாகவும் வல்லவனாகவும் மட்டும் இருந்தால்போதாது; அறிவு உடையவனாகவும் இருக்க வேண்டும் என்ற மூன்றாவது தத்துவத்தை உணர்த்துகிறது. அதனால் இது மிகவும் பயனுடைய நூலாகும்.
இதனை உரைநடையாக எழுதும் போது ஓர் அரிய சாதனையைச் செய்யவேண்டும் என்று முயன்றேன். பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியாகப் பணியாற்றும் போது கிடைத்த அறிவும் அனுபவமும் பெரிதும் பயன் பட்டன. 1981ல் ஒய்வு பெற்றேன். அண்மையில் இரண்டு ஆண்டுகளாக இவற்றை எழுதும் முயற்சியில் ஈடுபட் டேன். ஏட்டில் படித்தவர்கள் இவை பயன் உடையவை என்று எடுத்துக் காட்டினர்.
தமிழ் மாணவனாகத் தொடங்கி ஆசிரியப் பணியும் ஏற்று யான் ஆய்வு நூல்களையும் படைப்பு நூல்களையும் ஒரு சில வெளியிட்டிருக்கிறேன். எழுத்தில் தமிழ் இயல் அமைக்க முடிந்தது. இதை விமரிசனம் செய்யும் உரிமை எனக்கு இல்லை; வாசகர்க்கே உண்டு. புதுக்கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் நா. பாண்டுரங்கம் அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன் என்னை ஊக்குவித்தார். 'உம்முடைய நடை எளிமையும் எழிலும் கொண்டது; அதைப் பயன் படுத்தித் தொடர்ந்து எழுத வேண்டும்' என்றார். அவ் ஊக்கம் என்னைக் கெளரவித்தது; ஆக்க பூர்வமான பணி செய்துள்ள மன நிறைவோடு இந்நூலை வெளியிடுகின்றேன்.
ரா. சீனிவாசன்