முதல் பாகத்தில் குறிப்பிட்டது போன்று நான் கவிஞன் இல்லை, எழுத்தாளன் இல்லை. கற்பனையாளன், கனவு கண்டேன். கண்டதையும், கண்டதையும் எழுதினேன். அதை வாசகர்களிடம் பகிர நினைத்தேன். யாரையும் தாக்கும், சிறிதளவும் துன்புறுத்தும் நோக்கோடோ, இழிவு படுத்தும் நோக்கோடோ, எழுதவில்லை. கற்பனைக்குத் தீனிபோட்டேன். என்னை நானே செதுக்கிப் பார்த்தேன். பல இரவுகள் வந்து எனக்கு விளக்கு பிடித்தன. விலகிச்செல்ல மனம் இல்லாது விடிந்தவுடன் விடைபெற்று ஓடின. சில இரவுகள் துடிக்க வைத்தன, தவிக்க வைத்தன, தலையைப் பிய்த்துக் கொள்ளவைத்தன.
கவிதை என்று நினைக்காது படைப்பு என்று நினைக்காது, எண்ண ஓட்டம் என்று நினைத்து வாசித்துப் பாருங்கள். வரையறை வரம்புக்குள் இல்லை என்று வழக்காடாது, எழுத்துப் பிழை இருக்கின்றது என்று சபிக்காது, சொல்லியது நன்றாக இருந்தால் பிசைந்து பார்க்காது என்னுடன் பயணித்து, ரசித்துப் பாருங்கள், எனது கற்பனைக்குள் வாசித்துப் பாருங்கள்.
அ. முத்துவேழப்பன் பிறந்தது விருதுநகர் வளர்ந்து படித்தது கும்பகோணம் கல்லூரிப்படிப்பு அரசு ஆடவர் கல்லூரி கும்பகோணம். பணி: மைய அரசுப் பணியில் 1985ல் அகமதாபாத்தில் துவங்கி இயக்குநராக பணி ஓய்வு பெற்றது. சென்னை - இந்திய பொருளாதாரப் பணி (i.E.S) யிலிருந்து ஓய்வு பெற்ற ஆண்டு - மார்ச் 2021 கவிதை தொடர்ந்து எழுத துவங்கிய ஆண்டு 2019