ஒருவர் உடம்பில் உள்ள நோய்களைப் போக்கக் கூடிய அரிய மருந்தாக இம்மூன்றும் உள்ளன. உடல் நோயைப் போல ஆத்மாவுக்கு ஏற்படும் பிறவி என்னும் நோயைப் போக்கக் கூடிய மருந்தாக இந்த நூல் விளங்குகிறது.
இந்த நூலில் வரக்கூடிய ஒவ்வொரு பாட்டிலும் மூன்று அறநெறிக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இவை அறியாமை என்ற நோயைப் போக்கி விடும்.
அதன் காரணமாகத்தான் இந்த நூலுக்கு திரிகடுகம் என்று பெயர் வந்தது. அதன் பெருமையை கீழ்க்கண்ட வெண்பா மிகவும் சிறப்பாக உணர்த்து கிறது. ‘‘உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும் அல(கு)இல் அகநோய் அகற்றும் - நிலைகொள் திரிகடுகம் என்னும் திகழ்தமிழ்ச் சங்கம் மருவுநல் லாதன் மருந்து’’ இந்த நூல் காப்பு செய்யுள் உட்பட 101 வெண்பாக்களால் பாடப்பட்டுள்ளது. திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை போன்ற நூல்களின் கருத்துக்களுக்கு முரண்பாடு இல்லாமல் அதே கருத்தையே திரிகடுகமும் வற்புறுத்துகிறது.
கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடமை, இன்சொல் கூறல், ஈகை, அன்புடமை போன்றவை இந்த உலகில் மேற்கொள்ள வேண்டிய நல்ல வழிகளாகும்.
அத்துடன் மெய்யுணர்வு பெற்று மறுமைக்கு வேண்டிய நல்ல வழிகளையும் இந்த நூல் எடுத்துக் காட்டுகின்றது. திரிகடுகம் என்னும் இந்த நூலை இயற்றியவருடைய பெயர் நல்லாதனார் என்பதாகும்.
ஆதனார் இவருடைய இயற்பெயர். நல் என்பது அவருக்கு வழங்கிய அடைமொழி. இவரைப்போலவே நல்லுருத்திரனார் போன்ற பெருமக்களும் நல் என்னும் அடைமொழி பெற்று விளங்கியவர்கள் ஆவர். பூவை பூவண்ணனாகிய திருமாலின் திருவடிச் சிறப்புக்களை அந்த திருவடியால் உலகத்தை அளந்ததையும் இங்கு போற்றப்பட்டுள்ளது.
இந்தப் பாடலில் வரும் கடவுள் வாழ்த்தில் திருமாலின் அவதாரமாகிய கண்ணன் அவதாரத்தை போற்றிப் பாடப்பட்டுள்ளது. கண்ணன் குருந்த மரத்தை சாய்த்ததும் சகடத்தை உதைத்ததும் பாடி வணங்கப்பட்டுள்ளது.
இந்த நூலைச் சிறப்பித்து பாடப்பட்டுள்ள பாயிரம் இவர் போர்த்திறமையில் வல்லவர் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இங்கு காப்பு செய்யுளில் திருமாலை பாடியுள்ளதால் நூலாசிரியர் ஒரு வைணவர் என்பது தெளிவாகிறது. மேலும், இந்த நூலை சிறப்பித்துப் பாடும் பாயிரம் செய்யுள் இந்த நூலாசிரியர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருத்து என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்நூல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
திரிகடுகம் நான்கு அடிகளில் மூன்று கருத்துகளை விளக்கி அறியாமையைப் போக்கும் மருந்தைக் கூறுகிறது.
இருப்பினும் திரிகடுகம் சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய மூன்று நூல்களும் நோய்களை நீக்கி உடல்நலத்தை கொடுக்கும் மருந்துகளின் பெயர்களால் பாடப்பட்டுள்ளன.
எனவே, இந்த பதினெண் கீழ்கணக்கு நூல்கள் இன்று அரசாங்கத்தால் மொழி கடந்து, தேசம் கடந்து உலகம் முழுவதும் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தால் இவற்றை மொழி மாற்றம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமைத் தரக்கூடிய இந்த நூல்களை அனைவரும் சுவைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.