இவற்றில் பத்துப்பாட்டு இலக்கிய, இலக்கண முறைகளில் மேற்கோள் காட்டப்படும் சிறப்புப் பெற்றது. இந்த நூல்களில் தமிழ் பண்பாட்டிற்கே உரித்தான அகம், புறம் என்னும் ஒழுக்கங்கள் சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இதனைப் பற்றி பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள், "பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே" என்று சிறப்பித்து பாராட்டுகின்றார். மேலும், மலை, கடல், நகரம், நாடு, பெரும்பொழுது, சிறு பொழுது போன்றவற்றை அறிவியல் தன்மையுடன் விளக்குவதுடன் அந்த காலத்தில் மக்களின் பண்பு அரசாட்சி, பழக்க வழக்கங்கள், அரசியல், போர் முறை, சமய நிலை போன்றவற்றை தெரிவிக்கும் வரலாற்று களஞ்சியமாகவும் விளங்குகிறது.
காவிரி பூம்பட்டினத்தையும் பாலைத் தினையையும் கூறுவதால் இந்த நூல் பட்டினப்பாலை என்று பெயர் பெற்றது. பொருள் தேடி சென்ற தலைவன் பிரிந்து சென்றதால் அந்தத் துன்பத்தை தலைவி கூறுவதாக இந்தப் பாடல்கள் அமைந்துள்ளது.
ஆசிரியப்பாவால் அமைந்த பட்டினப்பாலையில் வஞ்சிப்பாவும், விரவி 301 அடிகளில் வந்திருப்பதால் இந்த நூலை வஞ்சி நெடும்பாட்டு என்றும் கூறுவார்கள்.