தமிழ் இலக்கிய உலகில், விவசாயம் சார்ந்த படைப்புகளை முன் வைத்து ‘செம்மண் இலக்கியம்’ என்ற வகைமையை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் சூர்யகாந்தன் என்பது இவரைப் பற்றிய விமர்சகர்களின் மதிப்பீடாகும்! உயிர்ப்போடு மண்ணின் மணமும், சொல்லின் வீரியமும் கொண்டு தொடர்ந்து எழுதி வருபவராக இவரைச் சொல்லலாம்! காய்ந்து போன குளங்கள், வறண்ட வயல்கள், மழை பொய்த்ததால் வாழ்க்கையும் பொய்த்துக் கடனாளியான விவசாயக் குடும்பங்கள் என நகர் மயமாக்கச் சூழலால், அவல வாழ்க்கை வாழும், எளிய மனிதர்களைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். வேளாண்மைத் தொழிலை நம்பி வாழும் ஏழை, எளியோரின், கூலித் தொழிலாளிகளின் வாழ்க்கையானது நகரத்தின் புதிய நாகரிக வளர்ச்சியினால் எந்தெந்த விதங்களில் பாதிப்பைச் சந்திக்கிறது? எப்படி இழப்புகளைச் சுமக்கிறது? என்பதைப் பிரச்சாரத் தொனி, துளியும் இல்லாமல் கலைப் பாங்குடன் பேசுகிறார்.
கொங்குச் சீமையின் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையைக் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அழுத்தமாகத் தனது எழுத்துக்களின் மூலமாகப் பதிவு செய்து வரும் முக்கியமான படைப்பாளர் சூர்யகாந்தன் என இலக்கிய உலகம் இவரை எண்ணி பெருமை கொள்கிறது...!