1976-ம் ஆண்டு, ஒரு நாள் காலை 'ஹிந்து' பேப்பரைப் புரட்டின நிமிஷத்தில், அந்த விளம்பரத்தைப் பார்த்தேன். எண்ணி நாலு வரிகள்தாம்... ஆனாலும், அதனுள் அடங்கியிருந்த சேதி வித்தியாசமாக இருந்தது. 'நீங்கள் ஒரு ஆல்கஹாலிக்கா? குடிப்பழக்கத்தை எப்படியாவது விட்டுவிட வேண்டுமென்று நினைக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள்... உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம்.' இவ்வள்வுதான். அடியில், சென்னை ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சங்கத்தின் விலாசம். 'ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்'ஸா? அப்படியென்றால்? அனாமதேயக் குடிகாரர்களா? அப்படியென்றால்? இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாய் அறிந்துகொள்ளவேண்டுமென்ற எண்ணம் எழ, அன்றே அந்த விலாசத்துக்குக் கடிதம் எழுதினேன். நாலாம் நாள் பதில் வந்தது. என் கணவரோ நானோ குடிக்கும் பழக்கம் உள்ளவராக இருக்கலாமென்ற ஊகத்தில், சங்கக் காரியதரிசி குடியின் கொடுமைகளை விளக்கி, எப்படிப் படிப்படியாய் அதிலிருந்து மீளலாமென்ற பாம்ஃப்லெட்டுகள் பலவற்றை எனக்கு அனுப்பியதோடு, 'சென்னைக்கு வந்தால் என்னைச் சந்தியுங்கள், உங்களுக்கு எந்த விதத்திலும் உதவ நான் தயார்' என்றும் எழுதியிருந்தார். இரண்டு நாள்களுக்கு வேறெந்த சமாச்சாரத்திலும் புத்தி போகாமல், அவர் அனுப்பியிருந்த பாம்ஃப்லெட்டுகளைத் திரும்பத்திரும்பப் படித்தேன். சாதாரணக் குடிகாரருக்கும், ஆல்கஹாலிக்குக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன? ஆல்கஹாலிஸ்த்தை வியாதி என்று குறிப்பிடுவது ஏன்? ஆல்கஹாலிஸ்த்தை இனம்கண்டுகொள்வது எப்படி? ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு எப்போது, ஏன் உருவானது? குடியை விட்டுவிட விரும்பும் நபருக்கு, ஏ.ஏ. அமைத்திருக்கும் பன்னிரெண்டு விதிமுறைகள் என்னென்ன? ஒரு குடிகாரன் மட்டுமல்லாமல் அவனைச் சார்ந்த அனைவரும், கூட்டுமுயற்சியாய் எப்படிச் செயல்படவேண்டும்? இப்படி... இதுநாள்வரை நான் கேள்விப்பட்டிராத விஷயங்கள். ஆல்கஹாலிஸம் என்பது வியாதியா? சர்க்கரை வியாதி மாதிரி ஒத்துக்கொள்ளாதவருக்குக் குடி வியாதியாகிவிடுகிறதா? இதென்ன புதுக் கண்ணோட்டம்? ஏன் இதுநாள்வரை இதுபற்றி யாரும் விரிவாக எடுத்துச்சொல்லவில்லை? 'ஐயா! குடிகாரனா?' என்று முகம் சுளிக்கும் சமூகம், குடி வியாதியாகிவிடுகிற பலருக்குத் தீவிர சிகிச்சை, அலாதி கவனிப்புத் தேவை என்பதை விளக்க ஏன் முன்வரவில்லை? திடுமென்று, பல வருஷங்களாய் நான் சந்த்த்திருந்த சில குடிகார நண்பர்கள் என் நினைவில் எட்டிப்பார்த்தார்கள்... பரமசாதுவாக இருந்தாலும், இரண்டு பெக் உள்ளே போய்விட்டால், மனைவியை நாலு பேர் முன்னால் 'திமிர் பிடித்த கழுதை' என்று திட்டி அனாவசியமாகச் சண்டை போட்ட நண்பர்... பத்து பேர்கள் நடுவில், வடைகளை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, விடியவிடிய சாப்பிட வராமல் பாடிய நண்பர்... தன்னை நினைத்தே சுயபச்சாதாபத்தில் அழுத நண்பர்... "நானா? ராத்திரி அப்படியெல்லாம் சொன்னேனா? நினைவில்லையே!" என்று காலையில் கண்களை விரித்த நண்பர்... வேலைக்குப் போகாமல், க்ளப்பில் இருபத்திநாலு மணிநேரமும் குடித்து, பித்துக்குளித்தனமாக நடந்து, மானம் மரியாதை இழந்த நண்பர்... இன்னும்... இன்னும்... கடவுளே! அவர்கள் அத்தனை பேரும் வெறும் மிடாக்குடியர்கள் இல்லையா? மனபலம் இல்லாமல் கோழைகளாக, குடிகாரர்களாய் மாறியவர்கள் இல்லையா? குடி வியாதியாக மாறி அவர்களைப் பாதித்ததால்தான், அந்த மட்டமான நடத்தையா? நிஜமாகவா! தாங்கள் ஆல்கஹாலிஸ் என்பதை அந்த நண்பர்கள் உண்ர்ந்திருந்தார்களோ? 'கணவர் வியாதியஸ்தர்... இதிலிரிந்து மீள அவருக்கு நம் ஒத்துழைப்பும் தேவை' என்று அவர்களின் மனைவிகள் நினைத்தார்களோ? ஆயிரமாயிரம் கேள்விகளும் சந்தேகங்களும் மனசைப் பிறாண்ட, அந்த முறை சென்னைக்குச் சென்றபோது, ஏ.ஏ.செயலாளரைச் சந்தித்தேன். நிறைய பேசினேன். ஏராமளமான புஸ்தகங்களைப் படித்தேன். மனோதத்துவ நிபுணர் டாக்டர் வி.ராமச்சந்திரனைச் சந்தித்தேன். பல குடிகாரர்களின் கேஸ்களைப்பற்றி விவாதித்தேன். அவர் சொன்னவற்றையெல்லாம் புரிந்துகொள்ள முயற்சித்தேன். விவரங்களைத் தெரிந்துகொள்ளத் தெரிந்துகொள்ள, புதுக் கண்ணோட்டத் திலிருந்து குடிகாரர்களைப் பார்க்கப்பார்க்க, நாம் புரிந்துகொண்டதை, உண்ர்ந்து கொண்டதை, மற்றவர்களிடம் பகிர்ந்திகொள்ள ஆசை உண்டானது. ஆக்கபூர்வமாக எதையாவது செய்யவேண்டுமென்ற வெறி உண்டானது. 'விகடனில்' தொடர்கதை எழுதச் சந்தர்ப்பம் எழுந்தபோது, ஆசிரியர் திரு. பாலனிடம், ஐந்து வருஷங்களாய் என்னுள் ததும்பிக்கொண்டு, ஒர் உருவமாய் வெளிப்பட்டு வரட்டுமா என்று தவித்துக்கொண்டிருந்த ஆல்கஹாலிஸ்த்தைப்பற்றிச் சொன்னேன். கண்களை மூடி நான் கூறியதைக் கேட்டபின், சற்றே கலங்கின கண்களோடு என் கருத்தை ஆசிரியர் ஆமோதிக்க, த்யாகு பிறந்தான், கங்கா பிறந்தாள், 'ஒரு மனிதனின் கதை' பிறந்தது. 'த்யாகுவின் வாழ்க்கை, ஒரு குடிகாரனின் மனசைத் தொட்டு சிந்திக்கவைத்தால்கூடப் போதும், என் எழுத்துக்கு வெற்றி கிடைத்துவிட்டது' என்று நினைத்திருந்ததால், 'நான் த்யாகுவாக இருந்தேன், இன்று மாறிவிட்டேன்', 'என் கணவர் த்யாகுவைப் போல வாழ்ந்தார், இன்று திருந்திவிட்டார்', 'கங்காவிடமிருந்து நான் ஒரு பாடம் கற்றேன்' என்று பல கடிதங்கள் வந்தபோது, நான் நெகிழ்ந்துதான்போனேன். எதையோ சாதிக்க என்னையும் என் எழுத்தையும் கடவுள் கருவிகளாக உபயோகித்திருப்பதை உணரும்போது, நெஞ்சில் பந்தாய் என்னவோ அடைப்பது நிஜம். இக்கதை உருவாக எனக்குத் தேவையான ஆலோசனைகளைத் தந்த டாக்டர் வி.ராமச்சந்திரன், ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சென்னை அமைப்பின் செயலாளர் - இருவருக்கும் என் தனிப்பட்ட நன்றி. -- சிவகங்கரி.