இந்த கடைச்சங்க நூல்களை மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என்று இருவகையாக சொல்வார்கள். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் பதினெட்டு நூல்களும் மேற்கணக்கு நூல்களாகும். இவை சங்க இலக்கியங்கள் எனப்படும்.
கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய இலக்கியங்கள் எனப்படும். தமிழ் விடு தூது என்னும் சிற்றிலக்கிய நூல், ‘‘மூத்தோர்கள் பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் கேடில் பதினெட்டுக் கீழ்க் கணக்கும்’’ என்று இம்மூன்று தொகுதி நூல்களையும் முறையே குறித்துள்ளதை நோக்க கீழ்க்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் வழக்குகள் பழைமையானவை என்பதும், அவை சுமார் 13, 14ம் நூற்றாண்டிலிருந்தே வழக்கில் வந்துள்ளன என்பதும் தெரிய வருகின்றன.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியை அறியாத தமிழர்கள் இல்லை.
இதில் நாலும் என்பது நாலடியாரையும் இரண்டு என்பத திருக்குறளையும் குறிக்கும். திருக்குறளைப் போல அறம், பொருள், இன்பம் என்ற மூன்று அதிகாரங்களைக் கொண்டது நாலடியார். நாலடியாரின் ஆசிரியர்கள் சமண முனிவர்கள் என்று கூறப்படுகின்றது. அதுபோலவே பாடல்களின் நடையிலும் சில வித்தியாசங்கள் தென்படத்தான் செய்கின்றது.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் முதலில் தோன்றியவை. சங்க இலக்கியங்களில் புலால் உண்ணுதல், கள் உண்ணல், பரத்தையர்களுடன் கூடி மகிழ்ச்சியாக வாழ்தல் போன்றவை இடம் பெற்றுள்ளன.
ஆனால், கீழ்க்கணக்கு நூல்கள் அந்த மூன்று செய்கையையும் மறுக்கின்றன. அவை கூடா ஒழுக்கம் என்று எடுத்துரைக்கின்றன. மற்றபடி சங்க இலக்கியங்களில் காணப்படும் கருத்துக்கள்தான் கீழ்க்கணக்கு நூல்களிலும் காணப்படுகின்றன.
சங்க காலத்தில் வெண்பா, கலிப்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா என்ற பாட்டு வகைகள் இருந்தாலும், வெண்பாக்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்தான் பெரும் வழக்கில் வந்துள்ளது.
சங்க இலக்கியங்களில் வளர்ச்சி தான் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள். அதன் காரணத்தை உணரும¢ விதமாக சொல்லாட்சி, பொருள் வளம், இலக்கண மரபுகள் போன்றவற்றில் கீழ்க்கணக்கு நூல்கள் சங்க இலக்கியங்களில் இருந்து மாறுபட்டவை.
பொதுமக்களுக்கு சேவை செய்பவர்கள் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் மற்ற பாடங்களைப் போல இந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை படிப்பதன் மூலம் நியாய தர்மங்களை மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்ள முடியும்.