இவர் பெயரில் கூத்தனார் என்பதே இயற்பெயராக அமைந்திருக்கின்றது. கண்ணன் என்பது இவருடைய தந்தையின் பெயராகும். இவர் மதுரையில் வாழ்ந்ததால் ஊர் பெயரும் சேர்ந்து வந்தது. இந்த நூல் முதல் வரியில் முதல் வார்த்தை பொருகடல் வண்ணன் என்று திருமால் பெயருடன் தொடங்குகிறது.
வெண்கடம்ப மலர்களுக்கு கலப்பையை ஆயுதமாகக் கொண்ட சிவப்பு நிறமுடைய பலராமனை உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த உவமை கார் நாற்பதில் 19வது பாடலில் இடம் பெற்றுள்ளது. இவையெல்லாம் இந்த நூலை எழுதிய புலவர் வைணவ சமயத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்துகிறது.
அத்துடன் கார் நாற்பதில் வரும் 7வது பாடலில் வேள்வி தீயைப் பற்றியும் 27வது பாடலில் திருக்கார்த்திகை அன்று திருவிளக்கு ஏற்றுவது பற்றியும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பாடல்களைப் பாடிய மதுரை கண்ணன் கூத்தனார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
அகத்திணைகளைப் பற்றி விவரித்து கூறும் கீழக்கணக்கு நூல்களில் மிகவும் சிறிய நூல் இந்த கார் நாற்பதாகும்.
இந்த நூலில் கார் காலம் பற்றி வர்ணனைகளும் அடையாளங்களும் பல இடங்களில் கூறப்பட்டிருக்கிறது.
அதன் காரணமாக நாற்பது செய்யுளைக் கொண்ட இந்த நூல் கார் நாற்பது என்று பெயர் பெற்றுள்ளது.
‘காலம், இடம் பொருள் கருதி நாற்பான், சால உரைத்தல் நானாற்பதுவே’ என்ற இலக்கண விளக்கப்பாட்டியல் நூற்பாவின்படி காலம் பற்றிய நாற்பது பாடல்கள் அடங்கிய ‘கார் நாற்பது’ என்ற நூல்தான் முதலில் கூறப்பட்டுள்ளது என்பது தெரிகின்றது. அதனால் நானாற்பதில் காலத்தால் முந்தியது இந்நூல் என்றும் கொள்ளுவர் சிலர்.
முல்லைத் திணையின் முக்கிய பொழுதான கார் காலத்தைப் பற்றி பாடப்பட்டுள்ள அகத்திணை பாடல்கள் நாற்பது இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு ஒழுக்கம் வகுத்து அந்த ஒழுக்கத்துடன் கற்பு நெறிகளையும் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் விளக்கக் கூடிய இந்த கார் நாற்பது தமிழர்களுடைய மிகச் சிறந்த பொக்கிஷமாகும்.