தொழில்முறையிலும், சுற்றுலா நோக்கிலும் நான் பல நாடுகளுக்குப் பயணம் போய் வருகிற வாய்ப்புக்கள் கிடைத்தன. ஆயினும் தென் ஆப்பிரிக்காவில், சகோதரர் ஷான் பிள்ளையின் விருந்தினராக இருபத்து மூன்று நாட்கள் இருக்கும் பேறு கிடைத்தது எனக்கு முதல் அனுபவம். அத்தனை நாட்கள் நான் வேறு எந்த நாட்டிலும் தங்கியதே கிடையாது. 1970ஆம் வருடம் முதற்கொண்டே எனக்கு நிறைய நண்பர்கள் அங்கே உள்ளார்கள். அவர்களை மீண்டும் சந்தித்து மகிழும் அனுபவமும் கிடைத்தது. இவற்றையெல்லாம் அப்படியே ஆவணப்படுத்திவிட வேண்டும் என்கிற எண்ணம் உண்டானது. நம்முடைய தேசப்பிதா மகாத்மா காந்தி, ‘மகாத்மா’வாகப் பரிணாமம் பெற்ற நிலம் அது. புகழ்பெற்ற சமாதான வீரரான நெல்சன் மண்டேலா பிறந்த நிலமும்கூட. இரு பெருமக்களைப் பற்றிய பல தகவல்களைக் கருத்தூன்றிப் படித்தேன். இருவரும் போராட்டங்களில் பங்குகொண்ட இடங்களைத் தரிசித்தேன். அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு இந்தச் சிறு நூலை என்பால் அன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்குப் பயன்படும் என்ற நம்பிக்கையோடு உருவாக்கியிருக்கிறேன். இது ஓர் ஆவணப் பதிவுதான்.