தற்போது உள்ள சூழ்நிலையில் மனிதர்களை நெறிப்படுத்தும், கதைகளும், கட்டுரைகளுமே தேவைப்படுகிறது. எங்கும் தலை விரித்தாடும், வன்முறை, தீவிரவாதம் அதன் விளைவாக நமக்குள் உருவாகும் பயம், விரக்தி, வெறுமை என்று மனித சமுதாயமே நிலை குலைந்து போயிருக்கிறது.
அவர்களை உற்சாகப்படுத்த ஒரு சின்னத் தூண்டுதல் போதும். இருளில் நடப்பவர்களுக்கு அதோ அங்கே விளக்கு தெரிகிறது என்று நம்பிக்கைத் தருவதே இந்தக் கட்டுரைகளின் நோக்கம்.
நம்மை நாமே மகிழ்ச்சிப் படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சிப் படுத்த முடியும். ஒரு குழந்தையின் சிரிப்பைப் பார்த்ததும், சுற்றி உள்ளவர்கள் முகத்திலும் புன்னகை மலர்கிறதே! அப்படி.
ஒட்டு மொத்த சமுதாயத்தையும் இந்தக் கட்டுரைகள் மாற்றி விடாது, என்றாலும் படிப்பவர்கள் மனதில் ஒரு சிந்தனையை உண்டாக்கும். அதுவே போதும்.