இவ்வாறு தனித்து நிற்கும் இதனை செவ்வியல் இலக்கியம் என்று கூறுவார்கள். இந்தியாவிற்கும் மற்ற மாநிலத்தவருக்கும் உலக மக்களுக்கும் வாழ்வியலை எடுத்துக் கூறும் பாடமாக அமைந்தது சங்க இலக்கியம். நெல்லுக்கு உப்பைப் பண்டமாற்றம் முறையில் விற்கப்பட்ட வணிக முறையை 60, 140, 390 ஆகிய பாடல்களில் காணலாம். உழவுத் தொழில் முடிந்த காலத்தில் கலப்பைகள் வீட்டில் உறங்குகின்றன. மழை பொழிவதும் நின்றுவிட்டது. குறுமுயலின் நிறம் போல முழு மதி தோன்றியது.
அது 6 புள்ளிகளுடன் வானில் தோன்றும் அறுமீன் எனப்படும். அந்த நாளை கார்த்திகை திருநாளாக தமிழக மக்கள் ஆடிப்பாடி கொண்டாடுகிறார்கள். தமிழர்களின் முறைப்படி இதுவே தமிழ் கடவுளான முருகனின் பிறந்த நாள் என்று எண்ணப்படுகிறது இதனை அகநானூற்றில் உள்ள 185வது பாடல் குறிப்பிடுகிறது.
மருத நில நாகனார் பாடிய அகநானூற்றுப் பாலைப் பாடலில் ஊராட்சி, நகராட்சிகளுக்கு அக்காலத்தே தேர்தல் நடைபெற்ற முறையை ஓர் உவமை மூலம் விளக்குகிறார்.
"கயிறுபிணிக் குழிசி ஓலை கொண் மார் பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்"
கயிற்றால் கட்டப் பெற்ற குடத்தினுள்ளே. யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அவர் பெயரை ஓலையில் எழுதி, தகுதியுடைய ஊர்ப் பொது வாக்காளர்கள் போடுவர். அதன்மீது இலச்சினை யிட்டு, அரக்கு வைத்து மூடியிருக்கும் அக்குடத்தை, தேர்தலை நடத்தும் ஆவண மக்கள் இலச்சினையை நீக்கி விட்டு உள்ளே கைவிட்டு ஓலைகளை எடுத்து எண்ணி முடிவு கூறுவர். குடத்தினுள் ஓலையை எடுக்க முயலுவது போலப் பருந்துகள் இறந்துபோன பெரு வீரர்களின் குடலை உருவி எடுக்கும்படியான பாழ்பட்ட பாலைநிலம் என்பது பாடற்கருத்து.
இத்தேர்தல் முறையைக் குடவோலை முறை என இடைக்கால உத்தரமேரூர்க் கல்வெட்டுப் போன்றவை விரிவாக எடுத்துரைக்கின்றன. இவ்வாறு தமிழர்கள் தொன்றுதொட்டுக் குடவோலை முறை மூலம் தேர்தல் நடத்திய விதத்தை அறிந்து கொள்ள முடிகிறது. இந்நூலைக் கற்று தமிழர்களுடைய நாகரிகம் கலை, இலக்கியம் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.