கி.பி. ஐந்தாவது நூற்றாண்டில் இவர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நூலில் கருத்தாழ மிக்க செய்யுள்கள் பல உள்ளன.
அவற்றுள் சில இளம்பூரணார், நச்சினார்கினியர் போன்ற தமிழில் மிகச் சிறந்த உரையாசிரியர்களால் பாராட்டப்பட்டவை. இவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்.
அவர்கள் உரை எழுதும்போது இந்த நூலில் உள்ள பல்வேறு வரிகளை மேற்கோள்களாக எடுத்துக் காட்டியுள்ளனர்.
இந்த நூலில் பழைய காலத்தில் உள்ள பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பல இடங்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
ஐந்திணை எழுபது என்னும் இந்த நூல் அகப்பொருளை விளக்கும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும்.
ஐந்திணைகளில் ஒவ்வொரு திணைக்கும் 14 பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இந்த நூலில் 70 பாடல்கள் ஐந்திணைகளை விளக்கி உள்ளதால் இந்த நூலுக்கு ஐந்திணை எழுபது என்று பெயர் உண்டாகியுள்ளது.
இந்த நூலில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற வரிசையில் திணைகள் அமைக்கப் பட்டுள்ளன.
இந்த நூலில் வரக்கூடிய திணைகளில் முல்லை திணையில் 25, 26 ஆகிய இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை.
அதுபோல நெய்தல் திணையில் 69, 70 ஆகிய பாடல்கள் மறைந்து போயுள்ளன. ஆக மொத்தம் 70 பாடல்களில் நான்கு பாடல்கள் குறைந்து 66 பாடல்கள் மட்டுமே இப்போது காணப்படுகிறது. ‘‘சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி வலி ஆகிப் பின்னும் பயக்கும்’’ என்ற பாடல் சான்றோர்களின் நட்பு வலிமையுடையதாகி நிலைபெற்று நிற்கும் என்று கூறுகின்றது.
இதுபோன்ற பயனுடைய பல நல்ல கருத்துக்கள் இந்நூலில் ஆங்காங்கு அமைந்துள்ளது. அவற்றைப் படித்துப் பயன்பெறுவோமா.