1890 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்த அகதா கிறிஸிடி, முதலாம் உலகப் போரின்போது எழுதத் தொடங்கி, தன் வாழ்நாளில் 100 நாவல்கள், நாடகங்கள், மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை எழுதினார். 1976 இல் அவர் இறக்கும்வரை அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார். அவை அவருக்குப் பெரும் புகழையும் பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்தன. இன்றைய நிலவரப்படி, அவருடைய நூல்கள் உலக அளவில் ஆங்கிலத்தில் 100 கோடியும், 100 அந்நிய மொழிகளில் இன்னொரு 100 கோடியும் விற்பனையாகியுள்ளன. ஹெர்கியூல் புவாரோ, மிஸ் மார்ப்பிள் ஆகிய அவருடைய கதாபாத்திரங்களின் பெயர்கள் உலகம் நெடுகிலும் பரிச்சயமானபோதிலும், இந்த ‘மர்மக்கதைகளின் மகாராணி’ தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்குத் தவிர மற்ற அனைவருக்கும் புரியாத ஒரு புதிராகவே விளங்கினார்.