இந்தப் 'பொய்மான் கரடு' என்னும் கதையை நான் எழுதியது எப்படி என்று மட்டும் சொல்லிவிடுகிறேன். ஆஸ்தான கவிஞர் ஸ்ரீராமலிங்கம்பிள்ளை அவர்களுக்கு நாமக்கல்லில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு நான் சென்றபோது வழியில் 'பொய்மான் கரடு' என்னும் இடத்தைப் பார்த்தேன். அந்தக் காட்டின் குகையில் தோன்றிய மாயமானையும் பார்த்தேன். அந்த மாயமான் மலைக் குகையிலிருந்து என் மனக் குகையில் வந்து புகுந்து கொண்டது. மிகவும் தொந்தரவு படுத்திக்கொண்டிருந்தது. எத்தனைதான் நல்ல வார்த்தையாகச் சொல்லியும் என் மனதைவிட்டுப் போக மறுத்துவிட்டது. கனவிலும் நனவிலும் வேண்டாத இடங்களிலும் எதிர்பாராத சமயங்களிலும் அந்தப் பொய்மான் என் கவனத்தைக் கவர்ந்து பிராணனை வாங்கிக்கொண்டிருந்தது. ஒரு நாள் எனக்குக் கடுங்கோபம் வந்து, 'ஓ, பொய்மானே! நீ என் மனதை விட்டுப்போகிறாயா இல்லையா? போகாவிட்டால் உன்னைப்பற்றி ஒரு கதை எழுதி ஊர் சிரிக்க அடித்து விடுவேன்!' என்று சொன்னேன். அதற்கும் அந்தப் பொய்மான் அசைந்து கொடுக்கிறதாக இல்லை. கடைசியில் ஒரு கதை எழுதியே தீர்த்தேன். பாத்திரங்கள் பெரும்பாலும் சேலம் ஜில்லாவைச் சேர்ந்த பாத்திரங்கள். திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நான் தங்கியிருந்த காலத்தில் பார்த்துப் பழகிய பாத்திரங்கள்.
பாத்திரங்கள் சிலர் முரடர்களாயிருப்பதாகவும், கதையும் சில இடங்களில் கரடு முரடாயிருப்பதாகவும் வாசகர்களுக்குத் தோன்றினால், அது கதை நடந்த இடத்தின் கோளாறே தவிர, என் குற்றமன்று என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சமயம் பொய்மான்கள் எதிர்ப்படுகின்றன. அந்தச் சமயத்துக்கு அவை உண்மையாகவே தோன்றுகின்றன. அந்தப் பொய் மான்களைத் துரத்திக்கொண்டு நாம் ஓடுகிறோம். துரத்திப் போகும்போது அம்மம்மா, எத்தனை பரபரப்பு! எவ்வளவு மனக்கிளர்ச்சி! என்ன தீவிர உணர்ச்சி! ஆனால் எவ்வளவு தூரம் தேடிப் போனாலும் பொய்மான் வெறும் மாயைத் தோற்றந்தான் என்பதைக் கடைசியில் உணர்கிறோம். ஏமாற்றம் அடைகிறோம்.
நம்மில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்பட்ட கடமையை உணர்ந்து அதை நன்கு நிறைவேற்ற முயல்வோமானால், அதில் மனத்திற்கு உண்டாகும் திருப்தியும் நிம்மதியும் வேறெதிலும் ஏற்படுவதில்லை. இந்த உண்மையைப் 'பொய்மான் கரடு' என்னும் இக்கதையை எழுதும் போது நான் நன்கு உணர்ந்தேன்.