தசரத மன்னர், நூற்றுக்கணக்கான அந்தப்புரப் பெண்களை 'ஆண்டு' வந்தார். அவர் இறந்தபோது, அத்தனை மனைவியரும் கதறித் துடித்தனர் என்ற செய்தி வருகிறது. 'பட்ட மகிஷி'களான தேவியருக்கும் சந்ததி உருவாகவில்லை. எனினும் மன்னனின் 'ஆண்மை' குறித்த கரும்புள்ளி எந்த இடத்திலும் வரவில்லை. மாறாக, 'யாகம்' என்ற சடங்கும், 'யாக புருடன்' வேள்வித் தீயில் தோன்றி, பாயசம் கொணர்ந்து தேவியர் பருகச் செய்தான் என்ற மாயப்புதிரும் புனையப் பெறுகிறது. மிதிலாபுரி மன்னருக்குப் பெண் சந்ததி இருந்தது. அந்த மன்னரின் அந்தப்புரக் கிளி ஒருத்தி கருவுற்றதும், அவள் சந்ததியைத் தந்துவிடக்கூடுமோ என்ற அச்சத்தில் மற்றவர்களால் கானகத்துக்கு அனுப்பப் பெறுகிறாள். அந்தத் தாயின் மகன் வழித் தோன்றலாக வந்த பெண் குழந்தையை அந்த அன்னையே, அரசன் ஏரோட்டும் பூமியில் பொதித்து வைத்தாள் என்று நான் கற்பனை செய்தேன். 'சத்திய வேள்வி' இச்செய்திகளைக் கொண்ட நவீனம்.
அதே பூமகள், இராமசந்திரனின் கரம் பற்றிய நாயகியான பின், தொடரும் வரலாறே, இந்தப் புனைவு.
இந்த வகையில் இந்தக் காவியம், சீதையின் கதையாகவே விரிந்தாலும், இது இராமாயணம் என்றே சிறப்பிக்கப்படுகிறது.
பூமகள் ஒரு நாயகரைச் சேர்ந்துவிட்டாள். நாயகன் மாதா பிதாவின் வாக்கிய பரிபாலனம் செய்ய, வனம் ஏகும்போது, இவள் தங்குவாளா? இவளுக்கு ஏது பிறந்த இடம்? 'இராமன் இருக்குமிடமே அயோத்தி' என்ற மரபு வழக்குக்கு ஆதாரமாக வனம் ஏகினாள்.
வனத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், இவள் கற்புக்கு நெருப்புக் கண்டம் வைத்தது.
இராமன், அரக்க வேந்தனைக் கொன்று, இவளை மீட்க வந்தபோது என்ன சொன்னான்?
"அரக்கர் மாளிகையில் அறுசுவை உணவுண்டு உயிர் வாழ்ந்தாய். உடனே உயிர் துறந்தாயில்லை. கடல் கடந்து வந்து அரக்கரைக் கொன்றது, உன்னை மீட்டு அழைத்துச் செல்வதற்காக இல்லை. வீரனின் மீது விழுந்து விட்ட பழியைப் போக்கிக் கொள்வதற்காகவே இலங்கையை வென்றேன்!”
இத்தகைய சொற்களால் அந்த அருந்தவக் கொழுந்தைச் சுட்டதுடன் அவன் நிற்கவில்லை.
அவளை எரிபுகச் செய்கிறான். இத்துடன் முடிந்ததா, பழியும் சந்தேகமும்?
ஊர் திரும்பி, முடிசூட்டிக் கொண்டபின், தன்னால் கருவுற்ற நாயகியின் மீது எங்கோ ஒலித்த தீச்சொல்லின் கருநிழல் விழுந்ததென்று... கானகத்துக்கு விரட்டினான். இது வெறும் நாடு கடத்தலா? எரிபுகுந்து புடம் போட்ட சொக்கத்தங்கமாக வெளியே வந்த நாயகியை - கருவுற்ற செல்வியை, மீண்டும் உயிருடன் கொளுத்தும் துரோகச் செயல் அல்லவோ? இந்தச் செயலின் பின்னே கற்பிக்கப்படும் ‘தொத்தல்' நியாயத்தை யாரால் ஏற்க முடியும்?
இப்படி ஒரு நிகழ்வு, ஆதிகவியின் இதிகாசத்தில் இடம் பெற வேண்டுமா? ஆதிகவியின் நோக்கம் யாதாக இருக்க முடியும்?
தமிழ்க் காவியத்தைக் கம்பன் ஆதிகவியை ஒட்டியே புனைந்தாலும், மகுடாபிஷேகத்துடன் கதையை முடித்துக் கொண்டது அரிய சிறப்பாகும்.
இந்தப் புனைவு ஏற்கெனவே நிலை நிறுத்தப்பட்ட பிம்பங்களைத் தகர்க்கலாம். அப்படியானால் நான் என் நோக்கில் வெற்றி பெற்றதாகக் கருதுவேன்.
வணக்கம், ராஜம் கிருஷ்ணன் (2001)
Rajam Krishnan was born in Musiri, Tiruchirapalli district. She had very little formal education and appears to have been largely an autodidact.
She started publishing in her twenties. She is known for writing well researched social novels on the lives of people usually not depicted in modern Tamil literature - poor farmers, salt pan workers, small-time criminals, jungle dacoits, under-trial prisoners and female labourers. She has written more than 80 books.[3] Her works include forty novels, twenty plays, two biographies and several short stories. In addition to her own writing, she was a translator of literature from Malayalam to Tamil.
In 1973, she was awarded the Sahitya Akademi Award for Tamil for her novel Verukku Neer.[6] In 2009, her works were nationalised by the Government of Tamil Nadu.